கங்குலி, பிசிசிஐயின் தலைவரானதுமே, பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான தீவிர முயற்சியை முன்னெடுத்து, வங்கதேச அணியை சம்மதிக்க வைத்து, இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடியதில்லை. இதுதான் இந்திய அணிக்கு முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி. 

பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. லைட் வெளிச்சத்தில் பந்து வீரர்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்திய அணி முதன்முறையாக பிங்க் நிற பந்தில் ஆடுவதால், இந்த போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்திய வீரர்களும் இந்த போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். 

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வரலாற்றில் இடம்பெறப்போகும் இந்த போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஜடேஜா, ரிதிமான் சஹா, அஷ்வின், உமேஷ் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் ஆடுகின்றனர். முதல் போட்டியில் ஆடிய அதே இந்திய அணி தான் இரண்டாவது போட்டியிலும் ஆடுகிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஜடேஜா, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி. 

வங்கதேச அணி:

ஷத்மான் இஸ்லாம், இம்ருல் கைஸ், மோமினுல் ஹக்(கேப்டன்), முகமது மிதுன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), நயீம் ஹசன், அல் அமீன் ஹுசைன், அபு ஜயீத், எபதத் ஹுசைன்.