அண்டர் 19 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்து அணியை 189 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 190 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. எனவே 5வது முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அண்டர் 19 உலக கோப்பை இறுதிப்போடி ஆண்டிகுவாவில் நடந்துவருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அண்டர் 19 அணிகள் இறுதிப்போட்டியில் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேகப் பெதெல்(2), கேப்டன் டாம் ப்ரெஸ்ட்(0), வில்லியம் லக்ஸ்டான் (4), ஜார்ஜ் பெல் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் 27 ரன்கள் அடித்தார்.
மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜேம்ஸ் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 8வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் ரியூவும் ஜேம்ஸ் சேல்ஸும் இணைந்து 93 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடிய ஜேம்ஸ் ரியூ 95 ரன்களில் ஆட்டமிழந்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் கடைசி 2 விக்கெட்டுகளை இந்திய அணி எளிதாக வீழ்த்த, 189 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராஜ் பவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 190 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டும் இந்தியா அண்டர் 19 அணிக்கு, 5வது முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வெல்ல அருமையான வாய்ப்பு இது.
