Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ ரோஹித் அதிரடி அரைசதம்; கடைசி நேரத்தில் கைகொடுத்த ஹர்ஷல் படேல், தீபக் சாஹர்! நியூசி.,க்கு கடின இலக்கு

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 20 ஓவரில் 184 ரன்களை குவித்து 185 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

india set tough target to new zealand in third t20
Author
Kolkata, First Published Nov 21, 2021, 9:06 PM IST

இந்தியா - நியூசிலாந்து  இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனும், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலும் சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்து அணியில் டிம் சௌதி ஆடாததால் மிட்செல் சாண்ட்னெர் கேப்டன்சி செய்தார். சௌதிக்கு பதிலாக லாக்கி ஃபெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக தொடங்கினாலும் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 29 ரன்களுக்கு இஷான் கிஷன் ஆட்டமிழக்க, அதே ஓவரில் சூர்யகுமார் யாதவும் டக் அவுட்டானார்.

ரிஷப் பண்ட்டும் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், அதை ஷ்ரேயாஸ் ஐயரும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து செய்தனர். ஆனால் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னில் ஆட்டமிழக்க, அதற்கடுத்த 17வது ஓவரிலேயே ஷ்ரேயாஸ் ஐயரும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 140 ரன்கள். 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், 180 ரன்களாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், ஹர்ஷல் படேல் 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் அடித்தார்.

ஆடம் மில்னே வீசிய கடைசி ஓவரில் தீபக் சாஹர் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 8 பந்தில் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, 185 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios