இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். நாங்களும் இதைத்தான் எதிர்பார்த்தோம் என மிகுந்த ஆர்வமுடன் விராட் கோலி அதை ஏற்றுக்கொண்டார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும்ம் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 2வது ஓவரிலேயே மயன்க் அகர்வால் ஜாமிசனின் பந்தில் வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கோலியும் 12 ரன்னில் நடையை கட்டினார். 

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் பிரித்வி ஷா, சிறப்பாக அடித்து ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். பிரித்வி ஷாவிற்கு ஷாட்டுகள் சிறப்பாக கனெக்ட் ஆகின. எனவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்து கொண்டிருந்த பிரித்வி ஷா, 40 ரன்னில் அவசரப்பட்டு ரன் அவுட்டானார். 

13வது ஓவரின் முதல் பந்தை அடித்த பிரித்வி ஷா, இரண்டாவது ரன் ஓடக்கூடாத ஒன்றுக்கு, ஷ்ரேயாஸ் ஐயரை இரண்டாவது ரன்னுக்கு அழைத்து, ரன் அவுட்டாகிவிட்டார். அவரது ரன் அவுட்டுக்கு அவர் தான் காரணம். செம டச்சில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவருக்கு, இது தேவையில்லாத வேலை. பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். பொறுப்புடன் முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், நீஷமின் பந்தில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய ராகுலும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார் ராகுல். ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மனீஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடினார். நிறைய உள்நாட்டு போட்டிகளில் ஆடிய அனுபவம் வாய்ந்த இருவரும், இன்னிங்ஸை அருமையாக எடுத்துச்சென்றனர். 

அபாரமாகவும் பொறுப்பாகவும் ஆடிய ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தை விளாசினார். ராகுலும் மனீஷ் பாண்டேவும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்களை சேர்த்தனர். சதமடித்த ராகுல், பென்னெட்டின் பந்தில் 112 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவர் அவுட்டான அடுத்த பந்தே மனீஷ் பாண்டேவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஷர்துல் தாகூர் 6 பந்தில் 7 ரன் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 49வது ஓவரின் மூன்றாவது பந்தில் களத்திற்கு வந்த சைனி, முதல் பந்தே பவுண்டரி அடித்தார். பின்னர் அந்த ஓவரில் எஞ்சிய 3 பந்துகளிலும் ரன் அடிக்கவில்லை. கடைசி ஓவரில் ஜடேஜாவும் சைனியும் ஆளுக்கு தலா ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 12 ரன் கிடைத்தது. எனவே இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 296 ரன்களை குவித்தது. 

297 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.