சாம்சன், துபேக்கு வாய்ப்பு: சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியால் 182 ரன்கள் குவித்த டீம் இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்று சமனில் உள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீலிடிங் பயிற்சியாளர்கள் யார் யார் தெரியுமா?
இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். முகேஷ் குமார் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கலீல் அகமது அணியில் இடம் பெற்றார். இதே போன்று ஜிம்பாப்வே அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ரிச்சர்டு கராவா அணியில் இடம் பெற்றார்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக தொடங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த அபிஷேக் சர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் 0 ரன்னில் வெளியேறிய அபிஷேக் சர்மா 2ஆவது போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் உடன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆரம்பித்தார். இதில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் ஜிம்பாப்வே வீரர்கள் தவறவிட்டனர். எனினும் கில் 49 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வந்த முதல் பந்து முதல் அதிரடியாக விளையாடிய கெய்க்வாட் 49 ரன்களில் நடையை கட்டினார்.
கடைசியில் சஞ்சு சாம்சன் 12 ரன்னும், ரிங்கு சிங் ஒரு ரன்னும் எடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் பிளெசிங் முசரபாணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.