பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 336 ரன்களை குவித்தது. 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டாரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அபாரமாக தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கத்தில் ராகுல் நிதானமாக ஆட, அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் ரோஹித். 34 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித், தொடர்ந்து அதிரடியாக ஆடினார். ரோஹித்தை அடுத்து அரைசதம் அடித்த ராகுல் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். ஒருநாள் கிரிக்கெட்டின் டாப் 2 பேட்ஸ்மேன்களான ரோஹித்தும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 24வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் சர்மாவுக்கு விராட் கோலி ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். சதத்திற்கு பிறகு அடித்து ஆடிய ரோஹித், 140 ரன்களில் ஹசன் அலியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நான்காம் வரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். தோனி வெறும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கோலி 71 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது அமீர் போட்ட பந்து, கோலியின் பேட்டில் படவேயில்லை. ஆனால் அம்பயர் அவுட்டே கொடுக்காதபோதும் அவசரப்பட்டு கோலி அவராகவே வெளியேறினார். 

48வது ஓவரில் கோலி அவுட்டாக, அதன்பின்னர் விஜய் சங்கரும் கேதர் ஜாதவும் அவர்களால் முடிந்தளவிற்கு ஆடி இன்னிங்ஸை முடித்தனர். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோரை பாகிஸ்தான் பவுலர்கள் கட்டுப்படுத்தினர். 45 ஓவர்களில் 298 ரன்களை அடித்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 336 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற 337 ரன்களை அடிக்க வேண்டும்.

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அடித்த 334 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதை இந்திய அணி முறியடித்துள்ளது.