IND vs SA: அபாரமான அரைசதம் அடித்து கடைசிவரை கடுமையாக போராடிய சஞ்சு சாம்சன்..! முதல் ODI-யில் இந்தியா தோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் 63 பந்தில் 86 ரன்களை குவித்து கடைசிவரை கடுமையாக போராடியும் கூட, 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்ற நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று லக்னோவில் நடந்தது.
பிற்பகல் ஒரு மணிக்கு டாஸ் போட்டு ஒன்றரை மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழை காரணமாக இரண்டே கால் மணி நேரம் தாமதமாக 3.45 மணிக்கு தொடங்கியது. அதனால் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள்.
இதையும் படிங்க - ஜடேஜா, பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! டாஸோடு சேர்த்து பெரிய குண்டையும் தூக்கிப்போட்ட ரோஹித்
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்க அணி:
ஜே மலான், டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ரபாடா, லுங்கி இங்கிடி, ஷம்ஸி.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலான் 42 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் பவுமா 8 ரன்களுக்கும் எய்டன் மார்க்ரம் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய குயிண்டன் டி காக் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
22.2 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் ஹென்ரிச் கிளாசனும் டேவிட் மில்லரும் இணைந்து இந்திய பவுலிங்கை அடித்து ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். இருவரும் கடைசிவரை களத்தில் நின்று தென்னாப்பிரிக்க அணிக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தனர். கிளாசன் 65 பந்தில் 74 ரன்களும், மில்லர் 63 பந்தில் 75 ரன்களும் அடிக்க, 40 ஓவரில் 249 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி.
250 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான்(4) மற்றும் ஷுப்மன் கில் (3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்திற்கு வெளியேறி ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் இஷான் கிஷனும் ருதுராஜ் கெய்க்வாட்டும் படுமந்தமாக பேட்டிங் ஆடினர். தென்னாப்பிரிக்க பவுலிங்கில் ஸ்கோர் செய்யாமல் முடியாமல் திணறினர். மஹராஜ், ஷம்ஸியின் சுழலில் படுமோசமாக தடுமாறினர். ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் என இரண்டையுமே எதிர்கொள்ள திணறினர். 42 பந்தில் வெறும் 19 ரன்கள் மட்டுமே அடித்து பந்துகளை வீணடித்து ஆட்டமிழந்தார் ருதுராஜ் கெய்க்வாட். இஷான் கிஷனும் 37 பந்தில் 20 ரன்கள் அடித்து ஏமாற்றமளித்தார்.
17.4 ஓவரில் வெறும் 51 ரன்கள் மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை, ஷ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே 37 பந்தில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 9 ஓவரில் ஷ்ரேயாஸ் - சாம்சன் ஜோடி 67 ரன்களை குவித்தனர்.
அதன்பின்னர் சஞ்சு சாம்சன் - ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஆனால் அருமையாக பேட்டிங் ஆடிய ஷர்துல் தாகூர் 33 ரன்னில் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் குல்தீப் யாதவ் (0), ஆவேஷ் கான்(3) ஆட்டமிழந்தனர்.
அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுப்புடனும் பேட்டிங் ஆடி ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்றார். கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் சஞ்சு சாம்சனுக்கு சிங்கிள் எடுத்து கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பேட்டை சுத்தினார். ஆனால் ஒரு ஷாட் கூட கனெக்ட் ஆகவில்லை, பந்தை பார்க்காமல் சம்மந்தமே இல்லாமல் சுத்தி, 4 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்து 5வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்து நோ பாலாக, அந்த பந்தில் பவுண்டரி அடித்தார் ரவி பிஷ்னோய்.
இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்
இதையடுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை ஷம்ஸி வைடாக வீசினார். அதனால் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன், அடுத்த 5 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிங்கிள் அடிக்க, 40 ஓவரில் 240 ரன்கள் அடித்து 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
63 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்து கடைசிவரை சஞ்சு சாம்சன் போராடியபோதிலும், ஆரம்பத்தில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் அதிகமான பந்துகளை வீணடித்ததாலும், 39வது ஓவரில் சாம்சனுக்கு ஸ்டிரைக் கிடைக்காததாலும், 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்க நேரிட்டது.