இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் சதமடித்தார். வார்னர் 69 ரன்கள் அடித்தார். இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த நிலையில், அதைப்பயன்படுத்தி ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் இணைந்து பொளந்துகட்டினர். அதிரடியாக ஆடிய ஸ்மித் 62 பந்தில் சதமடிக்க, மேக்ஸ்வெல் 19 பந்தில் 45 ரன்களை விளாசினர். வார்னர், ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 374 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

375 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் மயன்க் அகர்வாலும் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கிய நிலையில், மயன்க் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல்லில் ஃபார்மில் இல்லாததால் சரியாக ஆடாத கோலி, ஆஸ்திரேலியாவில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை ஆடி கோலி மிரட்டியதால், போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 21 ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும் ராகுல் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, 101 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.