Asianet News TamilAsianet News Tamil

ரோகித் சர்மா பெற்று கொடுத்த டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் அந்தஸ்து – ஒரே அடியாக காலி செய்த கில்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற ஒரு வாரத்திற்குள்ளாக சாம்பியன்ஸ் அந்தஸ்திற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது அவமானத்தை தேடி கொடுத்துள்ளது.

India Lost 1st T20I Match against Zimbabwe within a week after won the T20 World Cup Trophy 2nd Time rsk
Author
First Published Jul 6, 2024, 10:58 PM IST | Last Updated Jul 6, 2024, 10:58 PM IST

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிளைவ் மடாண்டே 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்லி மதேவெரே 21 ரன்களும், பிரையன் பென்னட் 22 ரன்களும், டியான் மியார்ஸ் 23 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். இது அவரது முதல் சர்வதேச டி20 போட்டியாகும். அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் நடையைக் கட்டினார். தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ரியான் பராக் 2 ரன்னிலும், ரிங்கு சிங் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். துருவ் ஜூரெல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியானது பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

நிதானமாக விளையாடி வந்த கேப்டன் சுப்மன் கில்லும் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 10.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த ரவி பிஷ்னோய் 9, ஆவேஷ் கான் 16, முகேஷ் குமார் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார். எனினும், அவராலும் அணிக்கு வெற்றி தேடி கொடுக்க முடியவில்லை.

கடைசியில் இந்திய அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணியைப் பொறுத்த வரையில் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் டெண்டாய் சதாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பிரையன் பென்னட், வெல்லிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, லூக் ஜாங்வே ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் முதல் தோல்வியை தழுவியது. தொடர்ந்து இந்திய அணி டி20 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஜிம்பாப்வே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சூப்பர் ஓவர் உள்பட தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள்:

13 மலேசியா (2022)

13 பெர்முடா (2021-23)

12 ஆப்கானிஸ்தான் (2018-19)

12 ரோமானியா (2020-21)

12 இந்தியா (2021-22)

12 இந்தியா (2023-24) – இன்றுடன் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணியானது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு விளையாடிய முதல் டி20 போட்டியிலேயே தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை சாம்பியனை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாறு படைத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios