தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. 

தேர்வுக்குழு ஆலோசனைக்கூட்டம் இன்று நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. அதற்குமுன், இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவுள்ள உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

டெஸ்ட் அணியை பொறுத்தமட்டில், பேட்டிங்கில் நல்ல தொடக்கம் அமைவதில்லை. டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இறங்கும் ராகுல், தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். தொடர்ந்து படுமோசமாக சொதப்பிவந்த ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மோசமாக ஆடினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்தும் கூட, ஆடும் லெவனில் ரோஹித் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

எனவே ராகுலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோஹித்தை டெஸ்ட் அணியிலும் தொடக்க வீரராக இறக்கலாம் என்ற குரல்கள் வலுத்தன. ரோஹித்தை பரிசீலிப்பதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தும் தெரிவித்திருந்தார். எனவே ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கும்பட்சத்தில், ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். மிடில் ஆர்டரில் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் உள்ளனர். 

ராகுலை ஓரங்கட்டிவிட்டு, உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் ப்ரியங்க் பன்சால் ஆகிய இருவரும் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி மற்றும் இவர்களுடன் கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக நவ்தீப் சைனி எடுக்கப்படலாம் என தெரிகிறது. விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், சஹா ஆகியோருடன் மற்றொரு திறமையான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான கேஎஸ் பரத் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைவார். ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் அணியில் இருப்பார்கள். ‘

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், அபிமன்யூ ஈஸ்வரன், ப்ரியங்க் பன்சால், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத்(விக்கெட் கீப்பர்).