வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஓபனிங்கில் இறங்க கிடைத்த வாய்ப்பை இஷான் கிஷன் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத போதிலும், அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏகப்பட்ட வீரர்கள் அணியில் தங்களுக்கான இடத்தைப்பிடிக்க போட்டி போடுகின்றனர்.
அப்படியிருக்கையில், கேஎல் ராகுல் ஆடாததால் ரோஹித்துடன் சேர்ந்து தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் இஷான் கிஷன் சோபிக்கவில்லை.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.15.25 கோடி என்ற பெரும் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததையடுத்து, அவர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதே, ரோஹித் - இஷான் ஜோடி தான் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஓபனிங்கில் இறங்கப்போகிறது என்பதால், தன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதை இஷான் கிஷன் அறிந்தார். அதுவே அவருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் பெரும் பாதிப்பாக அமைந்துவிட்டது.
இதையும் படிங்க - இந்திய டி20 அணியில் ஜடேஜாவிற்கு அந்த வீரர் தான் போட்டியாளர்..! முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கார் கருத்து
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் ஓபனிங்கில் இறங்கிய இஷான் கிஷன் 23.66 என்ற சராசரியுடன் வெறும் 71 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் மற்றும் இஷான் கிஷனை ஓபனிங்கில் இறக்கிவிட்டு, ரோஹித் சர்மா 4ம் வரிசையில் இறங்கினார். ஆனால் அவர்கள் இருவருமே சோபிக்கவில்லை. இஷான் கிஷனிடமிருந்து பவர்ப்ளேயில் அதிரடியான பேட்டிங் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மிஸ் ஆனது.

இஷான் கிஷன் சரியாக ஆடாவிட்டாலும், அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரர்களை பெரிய ஷாட் ஆடச்சொல்லித்தான் அனுப்பினோம். ஒன்றிரண்டு தொடர்களின் அடிப்படையில் அவர்கள் குறித்த முடிவு எடுக்கப்படாது. இஷான் கிஷன் திறமையான வீரர் என்பதாலும், சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதாலும் தான் அவரை அணியில் எடுத்திருக்கிறோம். எனவே இந்த ஒரு தொடரை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. அதேபோல ருதுராஜ் மற்றும் ஆவேஷ் கானை ஒரு போட்டியை வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களுக்கெல்லாம் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
