இந்திய டி20 அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு யார் போட்டியாளர் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து கூறியுள்ளார். 

இந்திய அணியில் அண்மைக்காலமாக கடும் போட்டி நிலவுகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான அணிகளிலும் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே ஒவ்வொரு வீரருமே கிடைக்கும் வாய்ப்பில் தங்களது திறமையை நிரூபித்துவருகின்றனர்.

குறிப்பாக டி20 அணிக்குத்தான் கடும் போட்டி. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பதில்லை. ஜடேஜாவும் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடவில்லை.

ஜடேஜா கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங் திறமையை வளர்த்துக்கொண்டு அபாரமான பேட்ஸ்மேனாக உருவெடுத்ததால், சிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியில் திகழ்கிறார். 

இதையும் படிங்க - இன்னிங்ஸ் பில்டும் பண்றான்.. ஃபினிஷும் பண்றான்..! பையன் செம பிளேயர்.. இந்திய வீரரை வெகுவாக புகழ்ந்த கவாஸ்கர்

இதற்கிடையே, தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறந்த ஆல்ரவுண்டர்களாக தங்களை நிலைநிறுத்தி கொண்டுள்ளனர். இவர்களில் தீபக் சாஹரும் வெங்கடேஷ் ஐயரும் இந்திய அணியில் கிட்டத்தட்ட நிரந்தர இடம்பிடித்துவிட்டனர். கடந்த 2 தொடர்களில் ஆடாத ஜடேஜா, முழு ஃபிட்னெஸுடன் இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டதால், ஷர்துல் தாகூர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய டி20 அணியில் ஜடேஜாவிற்கு போட்டியாளர் ஷர்துல் தாகூர் தான் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கார், ஷர்துல் தாகூர் - ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையேதான் போட்டி. ஜடேஜா ஃபிட்னெஸுடன் அணிக்குள் வந்ததால் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டுள்ளார். அதை வைத்துத்தான் நான் சொல்கிறேன். ஜடேஜா - ஷர்துல் ஆகிய இருவருமே கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆல்ரவுண்டர்களாக சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர். ஜடேஜா கடந்த 2 ஆண்டுகளில் பேட்டிங்கில் அபாரமாக வளர்ந்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜா, பின்வரிசையில் இடது - வலது பேட்டிங் காம்பினேஷனுக்கான வசதியையும் அளிக்கிறார். அது இந்திய அணிக்கு தேவை. அந்த ஒரு இடத்திற்கு ஜடேஜா - ஷர்துல் ஆகிய இருவரும் மாறி மாறி எடுக்கப்படுகின்றனர் என்று சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.