Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ 2வது இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ், சஹா அரைசதம்..! நியூசி.,க்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்திய அணி டிக்ளேர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்த நிலையில், 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் மொத்தமாக 283 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, 284 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

india declares second innings for 234 runs and set tough target to new zealand in first test
Author
Kanpur, First Published Nov 28, 2021, 4:26 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர்கள் டாம் லேதம் (95) மற்றும் வில்  யங் (89) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி 51 ரன்களுக்கே கில் (1), மயன்க் அகர்வால் (17), புஜாரா (22), ரஹானே (4), ஜடேஜா (0) ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடி 6வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். அஷ்வின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிதிமான் சஹாவும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை காப்பாற்றினார். 65 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சஹாவும் அக்ஸர் படேலும் இணைந்து சிறப்பாக ஆடினர். கழுத்து வலியால் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்யாத ரிதிமான் சஹா, கழுத்து வலியுடன் வந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிதிமான் சஹா 61 ரன்களும், அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய அக்ஸர் படேல் 28 ரன்களும் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, மொத்தமாக 283 ரன்கள் முன்னிலை பெற்று, 284 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. கடைசி இன்னிங்ஸில் இந்தியாவின் 3 தரமான ஸ்பின்னர்களை மீறி நியூசிலாந்து இந்த இலக்கை அடிப்பது கடினம். இன்றைய ஆட்டத்தில் 13 ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில், இன்றே ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் முனைப்பில் நியூசிலாந்தை 2வது இன்னிங்ஸை ஆடவைத்துள்ளது இந்திய அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios