இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். அகர்வாலுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் இணைந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்தது. கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை கோலியும் ரஹானேவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து தங்களது அனுபவத்தை பயன்படுத்தி, ரபாடா, நோர்ட்ஜே ஆகிய இருவரின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். ரஹானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்த கோலி, சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடினார்.

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 356 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் கோலி அடித்து ஆடி விரைவாக ரன்களை குவித்தார். மெதுவாக தொடங்கிய ஜடேஜாவும் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்தார். டி பிரேக் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் அடித்திருந்தது. 

டி பிரேக் முடிந்து களத்திற்கு வந்த விராட் கோலி, இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 7வது இரட்டை சதம். விராட் கோலி ஒருபுறம் அடித்து ஆட, மறுமுனையில் ஜடேஜா தாறுமாறாக அடித்து ஆடினார். முதல் 40 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த ஜடேஜா, அதன்பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். ஜடேஜா சதத்தை நெருங்கியதால் கேப்டன் கோலி டிக்ளேர் செய்யாமல் இருந்தார். இதற்கிடையே கோலி 250 ரன்களை கடந்தார். 243 ரன்கள் தான் இதற்கு முன்னர் கோலியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக இருந்தது. ஜடேஜா 91 ரன்களில் அவுட்டாக, 601 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

விராட் கோலி 254 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுதான் அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர். இந்திய அணி மெகா ஸ்கோரை அடித்து டிக்ளேர் செய்ததை அடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.