Asianet News TamilAsianet News Tamil

ஷ்ரேயாஸ் ஐயர் ஹாட்ரிக் அரைசதம்.. 3வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி  பெற்று, இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

india clean sweep sri lanka in t20 series with shreyas iyers hatrick half century
Author
Dharamsala, First Published Feb 27, 2022, 10:29 PM IST

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியது. இஷான் கிஷன், பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா(0) மற்றும் நிசாங்கா(1) ஆகிய இருவரும் முறையே முதல் இரு ஓவர்களில் சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். அசலங்கா 4 ரன்னிலும், லியானகே 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, தினேஷ் சண்டிமால் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். 12.1 ஓவரில் 60 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.

ஆனால் கடந்த போட்டியை போலவே இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 17 ஓவரில் இலங்கை அணி 103 ரன்கள் அடித்திருந்தது. அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்த ஷனாகா, அரைசதம் அடித்தார். அவரது அதிரடியால் கடைசி 3 ஓவரில் இலங்கை அணிக்கு 43 ரன்கள் கிடைத்தது. எனவே இலங்கை அணி 20 ஓவரில் 146 ரன்கள் அடித்து 147 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. ஷனாகா 38 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார் தசுன் ஷனாகா.

இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழக்க, அவருடன் தொடக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சனும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்த போட்டியிலும் அபாரமாக ஆட, மறுமுனையில் தீபக் ஹூடா(21) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(5) ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார்.

முதல் 2  போட்டிகளிலும் அரைசதம் அடித்து நாட் அவுட்டில் முடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து ஹாட்ரிக் அரைசதத்தை பதிவு செய்ததுடன், இந்த போட்டியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில்நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 17வது ஓவரிலேயே 147 ரன்கள் என்ற இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்று, 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios