T20 WC: அரையிறுதியில் இந்தியாவின் படுதோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு இந்திய அணி வெளியேறிய நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று அடிலெய்டில் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
இந்த டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கணித்திருந்தனர். ஆனால் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி.
கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட மற்றொரு அணியான இந்திய அணி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகிய 2 நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஆடிய போதிலும், தட்டுத்தடுமாறி அரையிறுதிக்கு வந்தது. பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதி வந்த இந்திய அணியின் பலவீனங்கள் அனைத்தும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அம்பலப்பட்டது.
இந்த தொடரில் இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் படுமோசமாக இருந்தது. தொடக்க வீரர்களிடமிருந்து நல்ல தொடக்கமும் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல்(5), ரோஹித்(28 பந்தில் 27 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (14) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். விராட் கோலி (40 பந்தில் 50 ரன்கள்) மற்றும் சூர்யகுமார் யாதவின் (33 பந்தில் 63 ரன்கள்) அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி.
169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே இந்திய பவுலிங்கை அடி வெளுத்து கட்டினர். தனது பலம்வாய்ந்த பந்தான இன்ஸ்விங்கை வீசாமல் புவனேஷ்வர் குமார் அவுட்ஸ்விங் வீசி பவுண்டரிகளாக கொடுத்தார். மேலும் பவர்ப்ளேயில் ஸ்லோ டெலிவரிகளை வீசி ரன்களை வாரி வழங்கினார். வழக்கமாக தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி கொடுத்துவந்த அர்ஷ்தீப் சிங்கின் பருப்பு இங்கிலாந்திடம் வேகவில்லை. அவருக்கு பவர்ப்ளேயில் ஒரு ஓவரும் மிடிலில் ஒரு ஓவரும் மட்டுமே வழங்கப்பட்டது. டெத் ஓவரில் பயன்படுத்துவதற்காக எஞ்சிய 2 ஓவர்களை மீதம் வைத்திருந்தார் கேப்டன் ரோஹித். ஆனால் ஆட்டம் 16 ஓவரிலேயே முடிந்துவிட்டது. டெத் ஓவருக்கு ஆட்டம் செல்லவே இல்லை.
ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்
அஷ்வின் வழக்கம்போலவே ரன்களை வாரி வழங்கினார். 2 ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கினார். அக்ஸர் படேல் 4 ஓவரில் 30 ரன்கள் வழங்கினார். அஷ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இருந்துவந்தது. ஆனால் அஷ்வின் மீது நம்பிக்கை வைத்து அவரையே ஆடவைத்தது இந்திய அணி நிர்வாகம். அதற்கான பலனையும் அறுவடை செய்தது. இந்த தொடர்முழுக்க இந்திய ஸ்பின்னர்கள் மிடில் ஓவரில் விக்கெட் வீழ்த்தி கொடுக்க முடியாமல் திணறியிருக்கின்றனர். மேலும் ரன்களையும் வாரி வழங்கியிருக்கின்றனர். அது இந்த போட்டியிலும் தொடர்ந்தது. முகமது ஷமியும் சோபிக்கவில்லை.
புவனேஷ்வர் குமார், ஷமி, அஷ்வின் என சீனியர் பவுலர்கள் இருந்தும், இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. பட்லர் 49 பந்தில் 80 ரன்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களையும் குவிக்க, 16வது ஓவரில் இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.
இந்த போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, பெரும் ஏமாற்றம். கடைசி சில ஓவர்களில் எங்கள் பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால் பவுலிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதுமாதிரியான அழுத்தம் நிறைந்த நாக் அவுட் போட்டிகளில் அழுத்தத்தை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல்லில் அழுத்தத்தை சமாளித்து ஆடிய அனுபவம் கொண்டவர்கள்தான். பொறுமையாக நிதானமாக தெளீவாக செயல்பட வேண்டும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்குத்தான் கிரெடிட் கொடுத்தாக வேண்டும்.
சானியா மிர்சாவை ஏமாற்றிய ஷோயப் மாலிக்.. அதிகாரப்பூர்வமாக விவாகரத்து..?
முதல் ஓவரில் ஸ்விங் இருந்தது. முதல் ஓவரில் பந்து ஸ்விங் ஆனது. ஆனால் சரியான இடத்தில் பந்துவீசவில்லை. ஸ்கொயர் திசைகளில் தான் அதிக ரன்களை ஸ்கோர் செய்தார்கள். அது நன்றாக தெரிந்தும் அதை தடுக்க முடியவில்லை. இதே அடிலெய்ட் ஆடுகளத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஆடியபோது காட்டிய கேரக்டரை இந்த போட்டியில் காட்டவில்லை. கடைசி 9 ஓவரில் 85 ரன்களை தடுப்பது என்பது மிகக்கடினம். அழுத்தமான சூழல்களில் நிதானமாக இருந்து திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் வெற்றி பெறலாம். ஆனால் இன்றைக்கு நாங்கள் அதை செய்யவில்லை என்றார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மா முழுக்க முழுக்க பவுலிங் யூனிட் மீதான அதிருப்தியைத்தான் வெளிப்படுத்தினார்.