வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை உறுதி செய்துவிட்டது இந்திய அணி. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடந்தது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 67 ரன்கள் சேர்த்தனர். தவான் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரது பார்ட்னர் ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 

தனது பணியை சரியாக செய்த ரோஹித் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோலி, ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே ஆகியோர் சோபிக்கவில்லை. கடைசி நேரத்தில் க்ருணல் பாண்டியா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. 

168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் இந்த போட்டியிலும் சொதப்பினர். நரைன் மற்றும் லெவிஸ் ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அதன்பின்னர் பூரான் 19 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய காம்ப்பெல் அரைசதம் அடித்து 54 ரன்களில் க்ருணலின் சுழலில் வீழ்ந்தார். பொல்லார்டும் ஹெட்மயரும் களத்தில் நின்றபோது 16வது ஓவரில் மழை குறுக்கிட்டது. 15.3 ஓவரில்  வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 

மழை தொடர்ந்து பெய்ததால் டி.எல்.எஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக க்ருணல் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.