இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று நடந்தது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. மும்பை வான்கடேவில் 200 ரன்கள் அடித்தால் கூட, இரண்டாவது பேட்டிங் ஆடும் அணிக்கு அது பெரிய கடின இலக்காக இருக்காது. ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பனி அதிகமாக இருக்கும் என்பதால், பவுலர்களுக்கு பந்துவீசுவது கடினமாக இருக்கும். எனவே அது இரண்டாவது பேட்டிங் ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பலமாக அமையும்.

அதுவும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் காட்டடி அடிக்கக்கூடியவர்கள். எனவே மிகப்பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். வழக்கமாக ஆரம்பத்தில் நிதானமாக ஆடி களத்தில் செட்டில் ஆனபின்னர் தான் அடிக்க தொடங்குவார் ரோஹித் சர்மா. ஆனால் இந்த போட்டியில் முதல் ஓவரிலிருந்தே தனது அதிரடியான பேட்டிங்கை தொடங்கினார். 

முதல் ஓவரிலிருந்தே ஓவருக்கு ஓவர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ரோஹித்தும் ராகுலும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை தெறிக்கவிட்டனர். ரோஹித் - ராகுலின் அதிரடியால் 8வது ஓவரிலே 100 ரன்களை எட்டியது இந்திய அணி. ரோஹித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவர், 71 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 135 ரன்களை குவித்து கொடுத்தனர். 12வது ஓவரில் ரோஹித் அவுட்டாக, அடுத்ததாக ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். இரண்டாவது போட்டியில் தனது பேட்டிங் ஆர்டரை ஷிவம் துபேவிற்கு வழங்கிய கோலி, இந்த முறை ரிஷப் பண்ட்டிற்கு அந்த வாய்ப்பை வழங்கினார். ஆனால் துபேவை போல அந்த அரிய வாய்ப்பை ரிஷப் பண்ட் பயன்படுத்தி கொள்ளவில்லை. 

ரிஷப் பண்ட் இரண்டே பந்தில் டக் அவுட்டாகி வெளியேற, அதன்பின்னர் களத்திற்கு வந்த விராட் கோலி, ரோஹித் சர்மாவின் அதிரடியை மறக்கடிக்கும் அளவிற்கு தாறுமாறாக அடித்து ஆடி, 21 பந்தில் அரைசதம் அடித்தார். இதுதான் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் அதிவேக அரைசதம். ரோஹித், விராட் ஆகிய இருவரும் ஒருமுனையில் காட்டடி அடிக்க, ராகுல் மறுமுனையில் மிகச்சிறப்பாக தனது அபாரமான ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடி ஸ்கோர் செய்துகொண்டிருந்தார். சதத்தை நெருங்கிய ராகுல், கடைசி ஓவரில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கடைசி பந்தில் சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்தார் விராட். இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 240 ரன்களை குவித்தது. 

200 ரன்களுக்கு மேல் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதுதான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் என்பதை அறிந்த இந்திய வீரர்கள், 240 ரன்களை குவித்தனர். 241 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 

புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டாவது ஓவரில் பிராண்டன் கிங்கும், ஷமி வீசிய மூன்றாவது ஓவரில் லெண்டல் சிம்மன்ஸும், தீபக் சாஹர் வீசிய நான்காவது ஓவரில் நிகோலஸ் பூரானும் ஆட்டமிழந்தனர். ஓவருக்கு ஒரு விக்கெட்டை இழந்துகொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பொல்லார்டும் ஹெட்மயரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தி கொடுத்தனர். ஹெட்மயர் 41 ரன்களில் குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹோல்டரும் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய பொல்லார்டு அரைசதம் கடந்தார். ஆனால் இலக்கை எட்டுவது சாத்தியமே இல்லை என்ற நிலையில், அவர் 68 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 173 ரன்கள் அடிக்க, இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. 

ஆட்டநாயகனாக கேஎல் ராகுலும், தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர்.