Asianet News TamilAsianet News Tamil

ஆனந்த கண்ணீரில் மூழ்கிய இந்திய வீரர்கள் – முதல் முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற ரோகித் சர்மா!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

India Beat South Africa by 7 runs Difference in T20 World Cup 2024 Final and India become T20 WC Champion for the 2nd Time in History
Author
First Published Jun 29, 2024, 11:36 PM IST

பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அக்‌ஷர் படேல் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். அக்‌ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்கவே, விராட் கோலி கடைசி வரை விளையாடி 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 2ஆவது ஓவரில் பும்ரா பந்தில் ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஸ்டப்ஸ் 31 ரன்னில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி நிதானமாக ஆரம்பித்தார். போட்டியின் 12.3ஆவது ஓவரில் டி காக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து டேவிட் மில்லர் களமிறங்கி அதிரடி காட்டினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய கிளாசென் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசியில் அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மார்கோ யான்சென் களமிறங்கினார். ஆனால், அவர் 2 ரன்களில் நடையை கட்டவே அடுத்து கேசவ் மஹராஜ் களமிறங்கினார்.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. டேவிட் மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இந்தியா 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. ரோகித் சர்மா முதல் முறையாக டிராபியை வென்று கொடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios