மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து வங்கதேசத்துக்கு எதிராக ஆடிய போட்டியிலும் வெற்றி பெற்றது இந்திய அணி. 

இந்நிலையில், இன்று மெல்பர்னில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடி 133 ரன்கள் அடித்தது. வழக்கம்போலவே இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடிய வெர்மா, இந்த போட்டியிலும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 34 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாசினார். 

ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அவர் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். வெர்மா அமைத்து கொடுத்த அதிரடியான அடித்தளத்தால், இந்திய அணி 20 ஓவரில் 133 ரன்கள் அடித்தது. 

134 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் யாருமே நிலைத்து நின்று ஆடவில்லை. தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ப்ரீஸ்ட் மற்றும் டெவைன் ஆகிய இருவரும் முறையே 12 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பேட்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சிறப்பாக ஆடிய மேடி க்ரீனை 24 ரன்களில் ராஜேஸ்வரி வீழ்த்தினார். க்ரீனும் மார்டினும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர். க்ரீன் 24 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்டினை 25 ரன்களில் ராதா யாதவ் வீழ்த்தினார். 

சீரான இடைவெளியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்ரேட்டை அந்த அணியால் தொடர முடியவில்லை. 18 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 

இந்நிலையில், பூனம் யாதவ் வீசிய 19வது ஓவரில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களை குவித்தார். அதனால் அந்த அணி நம்பிக்கை பெற்றது. கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஷிகா பாண்டே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹேலி ஜென்சன் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் ஜென்சன் சிங்கிள் அடிக்க, மூன்றாவது பந்தில் கெர்ரும் சிங்கிள் அடித்தார். 

இதையடுத்து கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் ஜென்சன் சிங்கிள் அடிக்க, ஐந்தாவது பந்தில் கெர் பவுண்டரி அடித்தார். இதையடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. எனவே பவுண்டரி அடித்தால் போட்டி டை ஆகும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த பந்தை பவுண்டரி அடிக்க முடியாததல் ரன் ஓடுவதில் ஆர்வம் காட்டாமல் ஜென்சன் ரன் அவுட்டாக, இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

Also Read - நியூசிலாந்தில் எப்படி பந்துவீசணும்..? இந்திய பவுலர்களுக்கு முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரின் அறிவுரை

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்து ஆட்டநாயகி விருதை வென்ற ஷஃபாலி வெர்மா தான், இந்த போட்டியிலும் ஆட்டநாயகி விருதை வென்றார். இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.