Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம்

டி20 உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 

india beat netherlands by 56 runs and goes to first place in points table in t20 world cup
Author
First Published Oct 27, 2022, 4:08 PM IST

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றைய போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டு ஆடியது. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஊதியம்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 12 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இணைந்து பொறுப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடித்து ஆடினாலும், அவரது வழக்கமான ஃப்ளோவில் ஆடவில்லை. கோலியும் பொறுமையாகவே ஆடினார். இந்திய அணியின் ஸ்கோர் மந்தமாகவே இருந்தது.

அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 39 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ரோஹித்தும் கோலியும் இணைந்து 73 ரன்களை சேர்த்தனர். 12 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது ரோஹித் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, கோலியும் அடித்து ஆடினார். 

பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்த கோலி, இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி 24 பந்தில் 45 ரன்கள் அடித்திருந்த சூர்யகுமார் யாதவ், இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை எட்டினார். ரோஹித் (53), கோலி(62) மற்றும் சூர்யகுமார்(51) ஆகிய மூவருமே அரைசதம் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை குவித்த இந்திய அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்தது.

180 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே இந்திய பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஷமி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய ஸ்பின்னர்களும் அபாரமாக பந்துவீசினர்.

டி20 உலக கோப்பையில் கிறிஸ் கெய்லின் சாதனையை காலி செய்த கோலி..! அடுத்த டார்கெட் ஜெயவர்தனே

நெதர்லாந்து அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே அடித்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அஷ்வின், அக்ஸர் ஆகிய நால்வரும் தலா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios