அஸ்வின் சுழல், பும்ராவின் டெஷிசன் 195 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து – இந்தியா 64 ரன்கள், இன்னிங்ஸ் வெற்றி!

இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 64 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-1 என்று தொடரை வென்றுள்ளது.

India Beat England by 64 Runs and innings in 5th and Final Test Match at Dharamsala rsk

தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. முதள் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

பின்னர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்ஃப்ராஸ் கான் 56, தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்தனர். கடைசியாக 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழந்து 473 ரன்கள் எடுத்தது.

பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் 3ஆம் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், குல்தீப் யாதவ் 30 ரன்னிலும், பும்ரா 20 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் எடுத்து 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டாம் ஹார்ட்லி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதையடுத்து இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்க வீரர் கிராவ்லி, அஸ்வின் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து பென் டக்கெட் 2 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். ஆலி போப் 19 ரன்களில் அஸ்வின் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது 100ஆவது போட்டியில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார்.

பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக 13 ஆவது முறையாக பென் ஸ்டோக்ஸை, அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

இதன் மூலமாக இந்த டெஸ்ட் தொடரில் முதல் பந்து வீச்சாளராக அஸ்வின் 25 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து, வந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் 36ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 20 ரன்களில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்க் வுட்டும் எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து சோயிப் பஷீர் களமிறங்கினார். 29 பந்துகள் வரை நின்ற பஷீர், ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். ஆனால், கேட்ச் என்று நினைத்து ரெவியூ எடுக்க, அவரைப் பார்த்து ஜோ ரூட் சிரித்தார். அதன் பிறகு வெளியேறினார். கடைசியாக ஜோ ரூட் 84 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்தியா 64 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்று கைப்பற்றியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் அஸ்வின் 5 விக்கெட்டும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios