இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என டி20 தொடரை வென்றது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இதையும் படிங்க - 7 மாசத்துல 7 கேப்டன்கள்.. என்னதான் நடக்குது இந்திய அணியில்..? மௌனம் கலைத்த கங்குலி

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரிச்சர்ட் க்ளீசன், மேத்யூ பார்கின்சன்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 4.5 ஓவரில் 49 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 20 பந்தில் 31 ரன்களும், ரிஷப் பண்ட் 15 பந்தில் 26 ரன்களும் அடித்தனர்.

இதையும் படிங்க - சிஎஸ்கேவிலிருந்து வெளியேறுகிறார் ஜடேஜா! சிஎஸ்கே தொடர்பான சமூக வலைதள பதிவுகளை மொத்தமாக நீக்கிய ஜடேஜா

விராட் கோலி மீண்டும் ஒருமுறை சொதப்பி, இந்த போட்டியிலும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக்(12), ஹர்ஷல் படேல்(13) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஆனால் ஜடேஜா அதிரடியாக ஆடி டெத் ஓவர்களில் பொறுப்புடன் நின்று முடித்து கொடுத்ததால் 20 ஓவரில் இந்திய அணி 170 ரன்கள் அடித்தது. ஜடேஜா 29 பந்தில் 46 ரன்கள் அடித்தார்.

171 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் (0) மற்றும் ஜோஸ் பட்லர்(4) ஆகிய இருவரையும் ஆரம்பத்திலேயே வீழ்த்திவிட்டார் புவனேஷ்வர் குமார். அதன்பின்னர் டேவிட் மலான்(19) மற்றும் ப்ரூக்(8) ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். லியாம் லிவிங்ஸ்டோன்(15) மற்றும் சாம் கரன்(2) ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்த, இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்தது.

மொயின் அலி (35) மற்றும் டேவிட் வில்லி(33) ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ஆனால் அவர்களது பேட்டிங் எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு உதவவில்லை. இங்கிலாந்தை 121 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்டது.