இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. நேற்று(24ம் தேதி) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, அக்ஸர் படேலின் சுழலில் வெறும் 112 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் க்ராவ்லி மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 53 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 112 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் 2வது செசனிலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்திருந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் ரஹானேவும் தொடர்ந்தனர். ரஹானே 7 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், பும்ரா ஆகியோர் ஜோ ரூட்டின் சுழலில் விழ, இந்திய அணி 145 ரன்களுக்கு சுருண்டது.

33 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் முதல் இன்னிங்ஸை போலவே 2வது இன்னிங்ஸிலும் மளமளவென ஆட்டமிழந்தனர். முதல் ஓவரை வீசிய அக்ஸர், முதல் ஓவரிலேயே க்ராவ்லி மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி, விக்கெட் வேட்டையை தொடர, அதன்பின்னர் சிப்ளி, ரூட், ஸ்டோக்ஸ், போப், ஃபோக்ஸ் என அனைவருமே அக்ஸர் படேல் மற்றும் அஷ்வினின் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக ஆண்டர்சனை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 81 ரன்களுக்கே சுருண்டது.

முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்திய அக்ஸர் படேல், 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆர்ச்சரின் விக்கெட்டை வீழ்த்திய அஷ்வின், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். 

இதையடுத்து வெறும் 49 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் கில்லுமே இலக்கை அடித்துவிட்டதால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்டநாயகனாக அக்ஸர் படேல் தேர்வு செய்யப்பட்டார். நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிவுக்கு வந்தது.