தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் அண்டர் 19 உலக கோப்பையில் ப்ரியம் கர்க் தலைமையிலான இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியையும் அடித்து துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வழக்கம்போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். சக்ஸேனா, திலக் வர்மா, கேப்டன் பிரியம் கர்க் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து ஆடிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் அதர்வா அன்கோல்கரும் ரவி பிஷ்னோயும் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அருமையாக ஆடிய அதர்வா அரைசதம் அடித்தார். 54 பந்தில் 55 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். ரவி 30 ரன்கள் அடித்தார். இவர்கள் அவுட்டானதும் எஞ்சிய விக்கெட்டுகளை மளமளவென இழந்த இந்திய அணி, 49.4 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

234 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியின் தொடக்க வீரர் சாம் ஃபானிங்கை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கம் மற்றும் டக் அவுட்டாகி வெளியேறிக்கொண்டிருந்த நிலையில், சாம் ஃபானிங் மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். 

முதல் ஓவரிலேயே இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட்டும் செய்யப்பட, முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி 3விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மூன்றாவது ஓவரில் டேவிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் கார்த்திக் தியாகி. ஒருமுனையில் சாம் ஃபானிங் நிலைத்து நிற்க மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 

Also Read - 3வது டி20.. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஃபானிங்குடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய பாட்ரிக் ரோவையும் கார்த்திக் தியாகி 21 ரன்னில் வீழ்த்தினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த லியாம் ஸ்காட், ஃபானிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். ஆனால் அவரையும் நீண்ட நேரம் நிலைக்கவிடாமல் 35 ரன்களில் அவுட்டாக்கி அனுப்பப்பட்டார். அவர் அவுட்டான அடுத்த இரண்டாவது ஓவரிலேயே சாம் ஃபானிங் 75 ரன்களில் 7வது விக்கெட்டாக ஆட்டமிழக்க, அடுத்த 3 விக்கெட்டுகளையும், அவர் அவுட்டான அடுத்த 4 ரன்களுக்குள்ளாகவே இந்திய பவுலர்கள் வீழ்த்திவிட்டனர். இதையடுத்து 159 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த கார்த்திக் தியாகி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.