இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும் நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன.

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியின் தொடக்க வீரர் சுனில் அம்ப்ரிஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஓட்டெலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தெவான் தாமஸ், சேஸ், கார்டெர், பவெல் ஆகிய நால்வரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

 அதன்பின்னர் பின்வரிசையில் ரூதர்ஃபோர்டு சிறப்பாக ஆடி 65 ரன்களை குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 47.4 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 237 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்தியா ஏ அணியின் கெய்க்வாட் - ஷுப்மன் கில் தொடக்க ஜோடி அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். 

இந்தியா ஏ அணியின் முதல் விக்கெட்டையே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. முதல் விக்கெட்டை வீழ்த்தவே ரொம்ப கஷ்டப்பட்டனர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய ஷுப்மன் கில் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா ஏ அணியின் ஸ்கோர் 110 ரன்னாக இருந்தபோது கில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 99 ரன்களை குவித்து ஒரு ரன்னில் சதத்தை இழந்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்தியா ஏ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.