தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்தார் இளம் வீரர் ஷிவம் துபே. 

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி 4-1 என வென்றது. இதையடுத்து அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி, 303 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில், 90 ரன்களை குவித்தார். அவரை தவிர ஜலஜ் சக்ஸேனாவும் அரைசதம் அடித்தார். இந்தியா ஏ அணி, 303 ரன்களை குவிக்க, 139 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி அதிலும் சொதப்பியது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க ஏ அணி, 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் சார்பில் நதீம் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜலஜ் சக்ஸேனா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியா ஏவை விட வெறும் 47 ரன்களே முன்னிலை பெற்றது. வெறும் 48 ரன்களை விரட்டிய இந்தியா ஏ அணியின் கேப்டன் கில், பாவ்னே மற்றும் கேஎஸ் பரத் ஆகிய மூவரும் ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் ரிக்கி பூயுடன் இணைந்த ஷிவம் துபே, 2 சிக்ஸர்களை விளாசி போட்டியை எளிதாக முடித்துவைத்தார். கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுவிட்டது.