2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் மார்ச் 9-ஆம் தேதி இந்திய நேரப்படி 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்திய அணி இத்தொடரில் இதுவரை தோற்காமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. அதே நேரத்தில் மிட்செல் சாண்ட்னரின் தலைமையில் நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பதிலடி கொடுக்குமா?:

இந்தப் போட்டி 2000ஆவது ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைப் போல இருக்கும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியிலும் 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அந்தக் கடந்த கால வலிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தீவிரமாக இருக்கும்.

நாள், நேரம் மற்றும் நேரடி ஒளிப்பரப்பு:

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி 2.30 மணிக்குத் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் இந்தப் போட்டி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

பிட்ச் எப்படி இருக்கும்?

பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான குரூப் ஏ லீக் போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச் இறுதிப் போட்டியிலும் பயன்படுத்தப்பட உள்ளது. பெரும்பாலான பிட்சுகளைப் போலவே, இது மெதுவாகவும் மந்தமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது, இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உறுதியாக உதவி செய்யும். அதனால், இந்திய அணியில்

லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்து வீச்சாளர்களிடம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் போட்டி போட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி அப்போது அணியில் இல்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் விளையாடிய வருண் சக்கரவர்த்தி இறுதிப்போட்டியிலும் ஆட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

பவுலர்களுக்கு சாதகம்:

இத்தொடரில் பாகிஸ்தானில் நடந்த 10 ஆட்டங்களில் சராசரி ஸ்கோர் 295. பல போட்டிகளில் இரு அணிகளும் 300 ரன்களைத் தாண்டி ரன்குவித்தன. ஆனால் துபாய் ஆடுகளம் அதற்கு மாறாக அமைந்துள்ளது. துபாயில் நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் ஆடுகளங்கள் பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமாகவே இருந்தன. துபாயில் இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களில் சராசரி ஸ்கோர் 246. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலியா எடுத்த 264 ரன்கள் தான் முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோராகும். அப்போட்டியில் இந்திய அணி 49வது ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

சக்கரவர்த்தி அபாரமான ஃபார்மில் இருப்பதாலும், ஜடேஜா, குல்தீப், அக்சர் ஆகியோரும் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து வருவதாலும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு இந்திய சுழற்பந்து வீச்சு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

டாஸ் தோல்வி, போட்டியில் வெற்றி!:

இந்தியா இத்தொடரில் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் டாஸ்களையும் இழந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்திய அணி எதிரணி நிர்ணயிக்கும் இலக்கை சேஸ் செய்வதில் இன்னும் வலுவாக இருக்கிறது என விமர்சகர்கள் கருதுகிறார்கள். இரண்டாவது பேட்டிங் செய்வதற்கு துபாய் ஆடுகளும் அதிக சாதகமாக இருக்கும்.

துபாயில் ஒரே மைதானத்தில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் விளையாடி இருப்பது இந்திய அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். துபாய் மைதானத்தில் 10 பிட்ச்கள் உள்ளன. அவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பவைதான். அதுவும் தொடரில் ஏற்கெனவே ஒரு ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பிட்ச்தான் பைனலிலும் இருக்கும். இந்த வசதியை இந்திய அணி சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி:

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் அதிரடியான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அடுத்து வரும் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோரும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

பவுலிங்கில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி நால்வரும் நியூசி., பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுவார்கள். அனுபவ வீரர் ஷமி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கலாம். எனவே அரையிறுதியில் விளையாடிய அதே 11 வீரர்கள் இறுதிப்போட்டியிலும் விளையாட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

நியூசிலாந்து அணி:

நியூசிலாந்து அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் விளாசி சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கும் கேன் வில்லியம்சனும் தென் ஆப்பிரிக்க அணியுடனான அரையிறுதியில் சதம் அடித்துள்ளார். ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் பிலிப்ஸ், சுழல் ஜாலம் காட்டும் கேப்டன் சாண்ட்னர், வேகப் பந்துவீச்சில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட் எடுத்த மேட் ஹென்றி ஆகியோர் அந்த அணிக்கு வலுசேர்க்கிறார்கள். நியூசி., அணியும் பெரிய மாற்றம் இல்லாமல் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டத்தின் நடுவில் சுழற்பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொள்ளும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இரு அணியிலும் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடும் மூத்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஜாக்கிரதையாக விளையாடினால் தங்கள் அணியின் வெற்றியை உறுதிசெய்ய முடியும்.