IND vs ENG: 112 ஆண்டுகளில் ஃபர்ஸ்ட் டெஸ்டில் தோல்வி அடைந்து 4-1 என்று தொடரை கைப்பற்றிய அணியாக இந்தியா சாதனை!
இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கடந்த 112 ஆண்டுகளில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த பிறகு, தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற முதல் அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து நடந்த விசாகப்பட்டினம் டெஸ்டில் 106 ரன்கள், ராஜ்கோட்டில் 434 ரன்கள், ராஞ்சியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்று தொடரை கைப்பற்றியது.
கடைசியாக 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தரமசாலாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி 477 ரன்கள் குவித்து 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தனர். ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும் எடுத்தனர். தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், இதில், பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்க வீரர் கிராவ்லி, அஸ்வின் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து பென் டக்கெட் 2 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். ஆலி போப் 19 ரன்களில் அஸ்வின் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது 100ஆவது போட்டியில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார்.
பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக 13 ஆவது முறையாக பென் ஸ்டோக்ஸை, அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இதன் மூலமாக இந்த டெஸ்ட் தொடரில் முதல் பந்து வீச்சாளராக அஸ்வின் 25 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து, வந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் 36ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 20 ரன்களில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்க் வுட்டும் எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து சோயிப் பஷீர் களமிறங்கினார். 29 பந்துகள் வரை நின்ற பஷீர், ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். ஆனால், கேட்ச் என்று நினைத்து ரெவியூ எடுக்க, அவரைப் பார்த்து ஜோ ரூட் சிரித்தார். அதன் பிறகு வெளியேறினார். கடைசியாக ஜோ ரூட் 84 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக இந்தியா 64 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்று கைப்பற்றியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் அஸ்வின் 5 விக்கெட்டும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
கடந்த 112 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் போட்டியில் தோல்வி அடைந்து எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்று தொடரை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
- Ashwin 100th Test Match
- Asianet News Tamil
- Ben Stokes
- Cricket
- Devdutt Padikkal
- Dharamsala
- Dharamsala 5th Test
- England Tour of India Test
- England and India 5 Match Test Series
- IND vs ENG 5th Test
- IND vs ENG Test Series
- India vs England 5th Test
- Jasprit Bumrah
- Jonny Bairstow
- Kuldeep Yadav
- Ravichandran Ashwin
- Ravindra Jadeja
- Rohit Sharma
- Sarfaraz Khan
- Watch IND vs ENG Test Series
- Yashasvi Jaiswal