ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு சன்ரைசர்ஸ், பஞ்சாப், கேகேஆர் ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இவற்றில் சன்ரைசர்ஸ் அணி, ஆர்சிபிக்கு எதிராக மோதும் அதன் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி அந்த போட்டியில் தோற்றால், கேகேஆர் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளில் எந்த அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெல்கிறதோ அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. 

கேகேஆர் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுமே தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் அணியின் ரன்ரேட் மைனஸில் உள்ளது. கேகேஆர் அணி கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பஞ்சாப் அணி அதன் கடைசி போட்டியில் சிஎஸ்கேவையும் எதிர்கொள்கின்றன. 

எனவே அந்த இரண்டு அணிகளுக்குமே கடைசி போட்டி மிகவும் டஃப்ஃபாக இருக்கும். இந்நிலையில், கேகேஆர் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. இன்று தோற்கும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். 

முக்கியமான நேரத்தில் வெற்றி கட்டாயத்தில் பஞ்சாப்பும் கேகேஆர் அணியும் மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பாப்பு எகிறியுள்ளது. பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி மொஹாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.