டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் மிகச்சிறந்த டி20 அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் முனைப்பில் உள்ளது. 

ராகுல் அல்டிமேட் ஃபார்மில் அபாரமாக ஆடிவருவதால், டி20 உலக கோப்பையில் அவர் தான் கண்டிப்பாக ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். எனவே ஷிகர் தவான் அணியில் எடுக்கப்பட்டாலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் தவான் அணியில் எடுக்கப்படுவாரா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அவரது இன்னிங்ஸ் முன்புபோல் வேகமாக இல்லை. மந்தமாக ஆடுவதால் அவருக்கான வாய்ப்பு குறைவுதான். 

அதேபோல, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோருக்கான வாய்ப்புகளும் குறைவுதான். இவர்களுக்கான இடங்களை ஐபிஎல்லில் அசத்தும் வீரர்களை வைத்து இந்திய அணி நிர்வாகம் நிரப்ப வாய்ப்புள்ளது. 

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடுவதன் மூலம் உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக இடம்பெற வாய்ப்புள்ள வீரர் என்றால், அது சூர்யகுமார் யாதவ் தான். சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர், விஜய் ஹசாரே, தியோதர் டிராபி, சையத் முஷ்டாக் அலி ஆகிய உள்நாட்டு தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துள்ளார். 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக ஆடினார். உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா  ஏ அணிக்காகவும் பல அதிரடியான மற்றும் அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால் அவர் இன்னும் இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் அவரை அணியில் எடுக்கும் வாய்ப்புக்காக கண்டிப்பாக அணி நிர்வாகம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

டி20 உலக கோப்பைக்கு சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி, சிறந்த வீரர்களை அணியில் சேர்க்க தயங்காது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் சூர்யகுமார் யாதவ், இந்த ஐபிஎல்லில் அசத்தும்பட்சத்தில், கண்டிப்பாக உலக கோப்பை அணியில் இடம்பெறுவார்.

Also Read - ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி.. வீடியோ

சூர்யகுமார் யாதவ், டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த வரிசையிலும் இறங்கி, அதற்கான அர்த்தத்தை சேர்க்கக்கூடியவர். டாப் ஆர்டராக இறங்கினால், அதிரடியான தொடக்கம், மிடில் ஆர்டராக இறங்கினால் ஃபினிஷிங் பணி என இரண்டையுமே திறம்பட செய்யக்கூடியவர். எனவே ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால் அவருக்கு உலக கோப்பை அணியில் இணைய வாய்ப்புள்ளது.