டெல்லி கேபிடள்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும் என்றால், அந்த அணி வீரர்கள் ஷாட் செலக்‌ஷனில் கவனம் செலுத்த வேண்டும் என்று வீரேந்திர சேவாக் அறிவுறுத்தியுள்ளார். 

ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் டெல்லி கேபிடள்ஸும் ஒன்று. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு சீசனையும் ஆடிவரும் டெல்லி அணி, கடந்த ஒருசில சீசன்களாக அருமையாக ஆடிவருகிறது.

ஆஸி., முன்னாள் ஜாம்பவான், லெஜண்ட் கிரிக்கெட்டர் ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியில் டெல்லி அணி அருமையாக ஆடிவருகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக ஃபைனலுக்கு சென்ற டெல்லி அணி, மும்பை அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்த சீசனிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்த டெல்லி அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஆனாலும், சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி அணி வீரர்கள் பேட்டிங் ஆடிய விதம் வீரேந்திர சேவாக்கை அதிருப்தியடைய செய்துள்ளது. தலா 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 137 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 

இதையும் படிங்க - பாகிஸ்தான் அளவுக்கு திறமையான வீரர்கள் இல்லாததால் தான் இந்தியா எங்களோட கிரிக்கெட் ஆட பயப்படுறாங்க-அப்துல் ரசாக்

எளிதாக அடித்திருக்க வேண்டிய இந்த இலக்கை, டெல்லி அணி மிகக்கடினமானதாக்கி கடைசி ஓவரில் அடித்து ஜெயித்தது. ஷிகர் தவானை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தவான் 39 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர்(2), ரிஷப் பண்ட்(15) ஆகிய 2 முக்கியமான வீரர்களும் சொதப்பினர். ஷிம்ரான் ஹெட்மயருக்கு முன்பாகவே அஷ்வின் இறக்கிவிடப்பட்டார். கடைசியில் ஹெட்மயர் 28 ரன்கள் அடித்து கடைசிவரை நின்று மேட்ச்சை முடித்து கொடுத்தார். அவரும், சிஎஸ்கே அணி தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்தித்தான் டெல்லிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் டெல்லி அணியின் நிலை பரிதாபம்தான்.

இந்நிலையில், தவறான ஷாட் செலக்‌ஷனால் டெல்லி வீரர்கள் ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி, அவர்கள் ஷாட் செலக்‌ஷனில் கவனம் செலுத்த வேண்டும் என்று சேவாக் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், டெல்லி அணி பேட்ஸ்மேன்களின் ஷாட் செலக்‌ஷனை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. ஷிகர் தவான் கவர்ஸ் திசையில் நின்ற ஃபீல்டருக்கு மேல் அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் சிக்ஸர் அடிக்க நினைத்து அவரது விக்கெட்டை தாரைவார்த்தார். 

மற்ற வீரர்களும் கூட அடிக்க முடியாத பந்துக்கெல்லாம் ஆட்டமிழக்கவில்லை. தவறான ஷாட்டுகளை ஆடமுயன்றே அனைவரும் ஆட்டமிழந்தனர். குறைவான இலக்கை விரட்டும்போது, ஷாட் செலக்‌ஷனில் கவனமாக இருப்பது முக்கியம். அப்போதுதான், ஆட்டத்தை கண்ட்ரோலில் வைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் எங்களுக்கு டஃப் கொடுக்கவல்ல அணி இதுதான்..! இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

தவான் அடித்த 39 ரன்கள் மிக முக்கியமானது. அவரும் சீக்கிரம் ஆட்டமிழந்திருந்தால், அந்த இலக்கை விரட்டுவதே டெல்லிக்கு கஷ்டம் ஆகியிருக்கும். டெல்லி வீரர்களின் ஷாட் செலக்‌ஷனை அந்த அணியின் பயிற்சியாளர்கள் மேம்படுத்த வேண்டும். டெல்லி பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் என்னை அதிருப்தியடைய செய்துவிட்டனர். அவர்கள் சாம்பியன் அணியாக வேண்டுமென்றால், இந்த தவறை எல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.