ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஷாமிலியா கானெல் திடீரென மயங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் மோதல்:

ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 50 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே அடித்தது. 

141 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி வீராங்கனைகள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 49.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. 

இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி.

மயங்கி விழுந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஷாமிலியா கானெல்:

இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் 47வது ஓவரின்போது வெஸ்ட் இண்டீஸின் ஃபாஸ்ட் பவுலிங் வீராங்கனை ஷாமிலியா கானெல் திடீரென மைதானத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்தார். அதைக்கண்ட மற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஷாமிலியா கானெலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.