Womens U19 T20 World Cup: இலங்கையை அசால்ட்டா வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 6 சுற்றில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அண்டர்19 மகளிர் அணி கேப்டன் ஷஃபாலி வெர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அண்டர்19 மகளிர் அணி:
ஷ்வேதா செராவத், ஷஃபாலி வெர்மா (கேப்டன்), சௌமியா திவாரி, கொங்காடி திரிஷா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ரிஷிதா பாசு, டைட்டஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ்.
சச்சின் - கோலி ஒப்பீடு.. கபில் தேவ் அதிரடி
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அண்டர்19 மகளிர் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அந்த அணியில் 3ம் வரிசையில் இறங்கிய விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் அடித்தார். உமயா ரத்னயாகே 13 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய பார்ஷவி சோப்ரா 4 ஓவரில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மன்னத் காஷ்யப் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்திய வீராங்கனைகள் பவுலிங்கில் பட்டைய கிளப்பினர். 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடியும் இலங்கை அண்டர்19 மகளிர் அணியால் வெறும் 59 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பெரிய பிரச்னை என்ன..? ரமீஸ் ராஜா அலசல்
60 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அண்டர்19 மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா 15 ரன்னிலும், ஷ்வேதா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ரிச்சா கோஷ் 4 ரன்னில் ஆட்டமிழக்க, 4ம் வரிசை வீராங்கனையான சௌமியா திவாரி 15 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடிக்க, 8வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.