Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை அறிவித்தது ஐசிசி! 2 இந்திய வீரர்களுக்கு இடம்; ஒரு ஆஸி., வீரர் கூட இல்லை

டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. இந்த அணியில் 2 இந்திய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
 

icc announces team of the t20 world cup tournament
Author
First Published Nov 14, 2022, 5:06 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே முன்னேறவில்லை. சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி, நெதர்லாந்திடம் அதிச்சி தோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.

இந்த டி20 உலக கோப்பையில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 2வதுமுறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளது ஐசிசி.

டி20 உலக கோப்பை: வின்னர், ரன்னர் & மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை எவ்வளவு..? முழு விவரம்

டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரையும் ஐசிசி இந்த டி20 உலக கோப்பையின் சிறந்த லெவனின் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை பட்லரும் ஹேல்ஸும் இணைந்து விக்கெட் இழப்பின்றி அடித்து இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். இந்த உலக கோப்பையின் சிறந்த தொடக்க ஜோடியாக இருந்த பட்லர் - ஹேல்ஸ் ஜோடியை தொடக்க வீரர்களாக ஐசிசி தேர்வு செய்துள்ளது.

3ம் வரிசை வீரராக, இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடி 4 அரைசதங்களுடன் 296 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரராக உலக கோப்பையை முடித்த விராட் கோலியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. 4ம் வரிசை வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 239 ரன்களை குவித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.

5ம் வரிசை வீரராக நியூசிலாந்துக்காக சிறப்பாக விளையாடி, இந்த உலக கோப்பையில் ஒரு சதமும் அடித்த க்ளென் ஃபிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 6ம் வரிசை வீரராக ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும்,  7ம் வரிசை வீரராக பாகிஸ்தான் ஃபைனலுக்கு வர முக்கிய காரணமாக திகழ்ந்த ஆல்ரவுண்டரான ஷதாப் கானையும் தேர்வு செய்த ஐசிசி, ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரனை தேர்வு செய்துள்ளது.

ஃபாஸ்ட் பவுலர்களாக இந்த உலக கோப்பையில் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிட்ட அன்ரிக் நோர்க்யா, மார்க் உட் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது. 12வது வீரராக ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளது. ஐசிசி தேர்வு செய்த லெவனில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு எந்த ஆஸி., வீரரும் சிறப்பாக ஆடவில்லை. ஆடியிருந்தால் தான் அந்த அணி அரையிறுதிக்காவது தகுதிபெற்றிருக்குமே..?

T20 WC: ஷாஹீன் அஃப்ரிடி பந்து வீசியிருந்தாலும் இங்கிலாந்து தான் ஜெயித்திருக்கும்! உண்மையை உரக்க சொன்ன கவாஸ்கர்

ஐசிசி தேர்வு செய்த டி20 உலக கோப்பையின் சிறந்த லெவன்:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் ஃபிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஷதாப் கான், சாம் கரன், அன்ரிக் நோர்க்யா, மார்க் உட், ஷாஹீன் அஃப்ரிடி.

12வது வீரர் - ஹர்திக் பாண்டியா
 

Follow Us:
Download App:
  • android
  • ios