2026 டி20 உலகக்கோப்பை நடக்கும் மைதானங்களின் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ளது. இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து நடந்த்தும் இந்த தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ளன. இந்த நிலையில், 2026 டி20 உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

பெங்களூவில் டி20 உலகக்கோப்பை இல்லை

அதாவது இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என்றும் ஐசிசி பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு இல்லை. ஆகவே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என தெரியவருகிறது.

பெங்களூரு ரசிகர்கள் ஷாக்

தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்துள்ளனர். ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்களே இதற்கு சாட்சி. ஆனால் டி20 உலகக்கோப்பை போட்டிகள் பெங்களூரு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மட்டுமின்றி நவி மும்பை, கவுகாத்தியிலும் 2026 டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறாது. 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபத்தில் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அட்டவணை எப்போது?

ஐசிசி அடுத்த வாரம் டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தங்கள் போட்டிகளை இலங்கையில் விளையாடும். மொத்தம் 20 அணிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை விளையாடும்.

சூப்பர் 8 போட்டிகள்

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் எட்டு' (Super Eight) சுற்றுக்கு முன்னேறும். தகுதிபெற்ற இந்த எட்டு அணிகள் பின்னர் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குச் சென்று, இறுதியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.