இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இறுதி போட்டி மாதிரியான ஒரு போட்டியை காண்பது மிகவும் அரிது. உலக கோப்பை வரலாற்றில் இப்படியொரு இறுதி போட்டி இதுவரை நடந்ததில்லை, இனிமேலும் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். அந்தளவிற்கு அருமையான த்ரில்லான போட்டி அது. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளுமே தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இரு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். நியூசிலாந்து அணி கடுமையாக போராடியது. கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது என்றாலும் வெற்றி சரியான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசி விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் சூப்பர் ஓவரிலும் டிரா ஆனால் என்ன செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் சேப்பல், உலக கோப்பை இறுதி போட்டி டிரா ஆகி, சுப்பர் ஓவரும் டிரா ஆனால், லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலை வகித்ததோ அந்த அணியை வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கலாம். அதிலும் ஒருவேளை ஒரே புள்ளிகளை பெற்றிருந்தால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் வெற்றி பெற்ற அணியை தீர்மானிக்கலாம். இதுவும் சர்ச்சையான முடிவாகத்தான் இருக்கும். ஆனால் இதன்மூலம் எழும் சர்ச்சைகள் சற்று குறைவாக இருக்கும். பவுண்டரிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட முடிவைவிட இது குறைவான சர்ச்சையாகத்தான் இருக்கும் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.