முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் கர்நாடக அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி, ஜெயிக்க வேண்டிய அந்த போட்டியில், படுமோசமான பேட்டிங்கால் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இதையடுத்து இரண்டாவது போட்டியில் இமாச்சல பிரதேசத்தை எதிர்கொண்டது தமிழ்நாடு அணி. இந்த போட்டியில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் ஆடவில்லை. கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இமாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணியின் சார்பில் சீனியர் வீரர் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக அஷ்வின் தான் 24 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே இவரைவிட குறைவான ரன் அடித்து வெளியேறினார். அதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இமாச்சல பிரதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்கள் அடித்தது. எனவே மொத்தமாக 216 ரன்கள் முன்னிலை பெற்ற இமாச்சல பிரதேச அணி, 217 ரன்களை தமிழ்நாடு அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் படுமோசமாக பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, 145 ரன்களுக்கே சுருண்டு, 71 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமாக தோற்றது. தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் கே முகுந்த் 48 ரன்களும் கேப்டன் பாபா அபரஜித் 43 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

முதல் போட்டியில் கர்நாடக அணியிடம் தோற்ற தமிழ்நாடு அணி, இரண்டாவது போட்டியில் இமாச்சல பிரதேசத்திடம் தோற்றுள்ளது.