இந்திய அணி தனது செயல்பாட்டை மேம்படுத்த ஐபிஎல்லை சுருக்கிக்கொண்டு, அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு ஒயிட்வாஷ்கள் மூலம் சொந்த மண்ணில் இந்தியாவின் ஆதிக்கம் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

இந்திய அணி மிக மோசமான தோல்வி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியால் ஒரு வீரர்கள் கூட ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. டெஸ்ட் தொடர் முழுவதும், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறினர். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் 16 மாதங்களில் இது மூன்றாவது டெஸ்ட் தொடர் தோல்வியாகும். இதனால் கம்பீர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்

இந்த நிலையில், இந்திய அணி ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் விளையாடுவதை குறைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தெரிவித்துள்ளார். "ஐபிஎல்-ஐ சுருக்கி, அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுங்கள்" என்று அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

டெஸ்ட் அணியின் தடுமாற்றத்துக்கு இதுதான் காரணம்

ஹெர்ஷல் கிப்ஸ் சொல்வது போல் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகளை வெகுவாக குறைத்து விட்டது. மேலும் டெஸ்ட் அணிக்கு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை எடுக்காமல் ஐபிஎல்லில் இருந்தே வீரர்கள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இதுவே இந்திய அணியின் டெஸ்ட் அணியின் தடுமாற்றத்துக்கு முக்கிய காரணம்.

முதல் தர போட்டிகளில் விளையாட வேண்டும்

மேலும் அந்த காலத்தில் சச்சின், டிராவிட், சேவாக், கங்குலி என அனைவரும் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல்தர போட்டிகளில் விளையாடி விட்டு தான் இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்தனர். ஆனால் இப்போதுள்ள வீரர்கள் ஐபிஎல் மூலம் நேரடியாக உள்ளே வந்து விடுகின்றனர். முதல் தர போட்டிகளில் விளையாடினால் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடக்கூடிய அனுபவம் கிடைக்கும். இதில் பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.