தனது பவுலிங்கில் பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் அடித்தால், அடுத்தது எப்படி பந்துவீசுவார் என்று சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான பவுலர் மற்றும் மேட்ச் வின்னர்களில் ஒருவர் சுனில் நரைன். 2012ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானதிலிருந்து இப்போது வரை கேகேஆர் அணியில் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சுனில் நரைன், கேகேஆருக்கு பல போட்டிகளை ஜெயித்து கொடுத்திருக்கிறார்.
2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியில் முக்கிய அங்கம் வகித்தவர். 2012ல் எப்படி தனது மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை கதறவிட்டாரோ, 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பேட்ஸ்மேன்களை மிரளவிடுகிறார்.
அவருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஸ்பின் பவுலர்கள் ஐபிஎல்லில் அசத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருமே சோடைபோயிருக்கிறார்கள். ஆனால் சுனில் நரைன் இன்றைக்கும் அசத்திவருகிறார். நல்ல ஃபார்மில் அடி வெளுத்து கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் கூட, நரைனின் சுழலில் ரன் அடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
நடந்துவரும் ஐபிஎல் 15வது சீசன் சுனில் நரைனுக்கு 11வது சீசன் ஆகும். அவர் 11 சீசன்கள் தொடர்ச்சியாக ஆடிவரும் போதிலும், அவரது பவுலிங்கை கணித்து அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக திகழ்கிறது. அதற்கு அவர் ஸ்மார்ட்டாக சிந்தித்து பந்துவீசுவதுதான் காரணம். அவரது பவுலிங் ஆக்ஷன் குறித்த சர்ச்சைகள் எழுந்தபோதிலும்,அதிலிருந்தும் பலமுறை மீண்டு வந்து திரும்ப திரும்ப சாதித்து காட்டியிருக்கிறார் சுனில் நரைன்.
ஐபிஎல்லில் சுனில் நரைன் 141 போட்டிகளில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதிரடி பேட்டிங்கிற்கும் பெரிய ஸ்கோர்களுக்கும் பெயர்போன ஐபிஎல்லில் நரைனின் எகானமி வெறும் 6.67 ஆகும். இந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நரைனின் எகானமி வெறும் 5 ஆகும்.
இந்நிலையில், அவரது பவுலிங் பேட்ஸ்மேன்களுக்கு அடித்து ஆட சவாலாக இருப்பதற்கான காரணத்தை அவர் பேசியதிலிருந்தே தெரிந்துகொள்வோம். தனது பவுலிங்கை பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடினால் என்ன செய்வேன் என்று சுனில் நரைன் கூறியிருக்கிறார்.
அதுகுறித்து பேசிய சுனில் நரைன், நான் ஒரு தவறான பந்தை வீசி, அதை பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்டார் என்றால், அடுத்து கண்டிப்பாக நான் அதைவிட நல்ல பந்துதான் வீசவேண்டும். அடுத்து நல்ல பந்து வீசி, அதையும் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்டால், அதன்பின்னர் பெரிதாக எதையும் முயற்சிக்கக்கூடாது. மறுபடியும் அதே பந்தைத்தான் வீசுவேன். ஏனெனில் எந்த பேட்ஸ்மேனும் முதலில் ஆடிய ஷாட்டை மறுபடியும் ஆட நினைக்கமாட்டார். புதிய ஷாட் தான் ஆட நினைப்பார். அதனால் முன்பு வீசிய பந்தையே திரும்பவும் வீசலாம். எனவே எனது பவுலிங் உத்தியை எளிதாகத்தான் வைத்துக்கொள்வேன் என்றார் சுனில் நரைன்.
