உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மான்செஸ்டரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி நடக்கவுள்ளது. 

இங்கிலாந்தில் நடந்துவரும் இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் இந்தியா - நியூசிலாந்து போட்டி உட்பட சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. இன்று அரையிறுதி போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டரில் காலையில் கொஞ்ச நேரம் சாரலோ அல்லது மிதமான மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோலவே போட்டி தொடங்கவுள்ள நிலையில், அங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 

லீக் சுற்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் நாக் அவுட் சுற்று போட்டிகளின் போது மழை வந்தால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம்..

அரையிறுதி போட்டிக்கான கண்டிஷன்கள்:

1. அரையிறுதி போட்டி நடைபெறும் நாள் முழுவதும் மழை பெய்து போட்டி ஆடமுடியாவிட்டால், மறுநாள் முழு போட்டியும் நடத்தப்படும்.

2. போட்டி நடந்துகொண்டிருக்கும்போது பாதியில் மழை குறுக்கீட்டால் ஆட்டம் தடைபட்டாலும், நிறுத்தப்பட்டதிலிருந்து மீதி ஆட்டம் மறுநாள் நடைபெறும்.

3. ஒருவேளை போட்டி நடக்கும் நாள் மற்றும் மறுநாள்(ரிசர்வ் நாள்) இரண்டு நாட்களுமே மழை பெய்தால் இரண்டாம் நாள்(ரிசர்வ் நாள்) சூப்பர் ஓவர் முறையில் ஒரே ஒரு ஓவர் மட்டும் வீசப்பட்டு முடிவு காணப்படும். 

4. சூப்பர் ஓவரே வீசமுடியாத அளவிற்கு இரண்டாம் நாளும் முழுவதுமாக மழை பெய்தால் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னணி வகித்ததோ அந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.

இறுதி போட்டிக்கான கண்டிஷன்கள்:

அரையிறுதி போட்டிக்கான கண்டிஷன்களில் முதல் மூன்றும் அப்படியே இறுதி போட்டிக்கும் பொருந்தும். 4வது பாயிண்ட் மட்டுமே சற்று மாறும்.

அதாவது அரையிறுதி போட்டியை பொறுத்தமட்டில் இரண்டு நாட்கள் முழுவதுமே மழை பெய்தால், லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். அதே இறுதி போட்டியாக இருந்தால் அந்த மாதிரி முடிவு எட்டப்படுவது சரியாக இருக்காது என்பதால் இறுதி போட்டிக்கு வந்த இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.