இந்தியா - வங்கதேசம் இடையே கொல்கத்தாவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனிலேயே வங்கதேச அணி ஆல் அவுட்டாகிவிட்டது.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் ஏமாற்றமளித்த போதும், புஜாரா அரைசதம் அடித்தார். அதன்பின்னர் கோலியும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 

வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் முதல் ஓவரை வீசியது இஷாந்த் சர்மா தான். இஷாந்த் சர்மாவும் உமேஷ் யாதவும் முதல் ஸ்பெல்லை வீசினர். இஷாந்த் முதல் ஓவரை வீச, இரண்டாவது ஓவரை உமேஷ் வீசினார். உமேஷ் யாதவ் தனது முதல் ஸ்பெல்லை வீசும்போது மிகவும் சிரமப்பட்டார். பவுலிங் போட ஓடிவரும்போதே வழக்கமான ரன் - அப் இல்லாமல் திணறினார். மேலும் லைன் அண்ட் லெந்த்தும் சரியாக இல்லை. அவரது முதல் ஸ்பெல்லில் வங்கதேச தொடக்க வீரர்கள் ஒருசில பவுண்டரிகளை அடித்தனர். 

உமேஷ் யாதவ் அந்த குறிப்பிட்ட முனையில் திணறுகிறார் என்பதை அறிந்த கேப்டன் கோலி, உடனடியாக உமேஷை நிறுத்திவிட்டு ஷமியிடம் பந்தை கொடுத்தார். இரண்டு ஓவர்கள் கழித்து, இஷாந்த் சர்மா வீசிய முனையில், இஷாந்த்தை நிறுத்திவிட்டு, அந்த முனையில்(ஹைகோர்ட் எண்ட்) உமேஷ் யாதவை வீச வைத்தார். உமேஷ் யாதவ் பந்துவீசிய முனையை மாற்றி கொடுத்ததுமே, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ். கேப்டன் கோலி முனையை மாற்றி பந்துவீச வைத்ததும், அந்த ஓவரின் முதல் பந்தில் மோமினும் ஹக்கையும் மூன்றாவது பந்தில் முகமது மிதுனையும் வீழ்த்தி அசத்தினார். 

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இந்த விக்கெட்டுகளுக்கான கிரெடிட் கேப்டன் கோலிக்கும் சேரும். ஏனெனில் உமேஷ் யாதவ் திறனில்லாமல் தவறு செய்யவில்லை. மாறாக, அவர் அந்த குறிப்பிட்ட முனையில் திணறுகிறார் என்பதை அறிந்த கோலி, உடனடியாக அவரை வேற முனையில் பந்துவீச வைத்தார். அதற்கான பலனையும் அளித்தார் உமேஷ் யாதவ்.