சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

இந்திய அணியில் விராட் கோலி மட்டும் சாதனைகளை குவிக்கவில்லை. தனது கெரியரின் தொடக்கத்தில் பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், 2013க்கு பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ள ரோஹித் சர்மா, கோலிக்கு நிகராக சாதனைகளை குவித்துவருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக அவரது பேட்டிங் அபாரம். மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான பேட்டிங்கால் பல சாதனைகளை முறியடித்து அசாத்திய மைல்கற்களை செட் செய்துவருகிறார் ரோஹித். 

சமகாலத்தில் 2 தலைசிறந்த வீரர்கள் இந்திய அணியில் ஆடுவது அணிக்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவருக்குள்ளும் சாதனை படைப்பதில் நடக்கும் போட்டி, இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறது. 

அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி ஒன்று நிலவுகிறது. சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் சர்மா 2547 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திலும் 2544 ரன்களுடன் வெறும் 3 ரன்கள் பின் தங்கிய நிலையில், விராட் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர். 

இருவரும் கிட்டத்தட்ட சமமான ரன்னில் இருப்பதால், இன்றைய போட்டியில் இருவரில் யார் முதலிடத்தை பிடிக்கப்போகிறார் என்பது தீர்மானமாகிவிடும். இருவருக்கும் இடையேயான இந்த போட்டியில் இருவரின் கெரியரின் முடிவில் யார் முதலிடத்தை பிடிப்பார் என்பது கண்டிப்பாக கணிக்க முடியாத விஷயம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் முந்திவருகின்றனர். 

ரோஹித்தை விட கோலி வெறும் 3 ரன்களே பின் தங்கியிருப்பதால் இன்றைய போட்டியில் அபாரமாக ஆடி முதலிடத்தில் இருக்கிறார் என்பதை பார்ப்போம். ரோஹித் முதலிடத்தை தக்கவைக்கிறாரா அல்லது கோலி முதலிடத்தை பிடிக்கிறாரா என்பது இன்று தெரிந்துவிடும். யார் முதலிடத்தில் இருந்தாலும், அடுத்த போட்டியிலேயே அது மாறுவதற்கான வாய்ப்புள்ளது. 

அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் 975 ரன்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 25 ரன்கள் அடித்தால், மார்டின் கப்டில் மற்றும் கோலின் முன்ரோவுக்கு அடுத்து, சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.