Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணி அந்த ஒரு விஷயத்தில் இன்னும் மேம்படணும்..! ஓபனா ஒப்புக்கொண்ட ஹெட் கோச் ராகுல் டிராவிட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
 

Head Coach Rahul Dravid highlights the area that Team India need to get better at
Author
Johannesburg, First Published Jan 2, 2022, 8:17 PM IST

3 டெஸ்ட் மற்றும்  3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 

தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் வெற்றி பெற்று கொடிநாட்டியது இந்திய அணி.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. 

தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடர்கள் அனைத்தும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது(2021-2023). ஃபைனலுக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். எனவே ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் மிக முக்கியம்.

ஆஸ்திரேலிய அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்திலும், அதே 100 சதவிகித வெற்றியுடன் இலங்கை அணி 2ம் இடத்திலும் உள்ளன. 3ம் இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணி 63.28 என்ற வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் இருந்த இந்திய அணி, முதல் டெஸ்ட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் புள்ளிகளை இழந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் புள்ளி குறைக்கப்பட்டு, 63.28லிருந்து இப்போது 63.09ஆக குறைந்தது. இந்த புள்ளி குறைப்பு, புள்ளி பட்டியலில் இந்திய அணியின் இடத்தை பாதிக்கவில்லை என்றாலும், இது மிகவும் கடுமையானது.

ஜனவரி 3ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஐசிசி பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அபராதங்கள் விதிக்கிறது. மிகக்கடினமாக சில விஷயங்களை முயற்சிக்கிறது ஐசிசி. எங்கு, எப்படி நேரம் வீணாகிறது என்பது கடினம். காயங்கள் ஏற்படுகின்றன, விக்கெட் விழுவதில் சில நேரம் பாதிக்கப்படுகிறது.. இப்படியாக பல காரணங்களால் நேரம் வீணாகிறது. எனவே நேர மேலாண்மையில் மேம்பட வேண்டும்.   

விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான். 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடும்போது நேர மேலாண்மை செய்வது கடினம். பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக புள்ளிகளை இழந்தது மிகுந்த அதிருப்திக்குரிய விஷயம் தான். இந்தியாவில் ஆடும்போது அந்த பிரச்னையில்லை. ஏனெனில் அதிகமாக ஸ்பின்னர்கள் தான் பந்துவீசுவார்கள். வெளிநாடுகளில் இந்த விஷயத்தை சரியாக நிர்வகிக்க வேண்டியிருக்கிறது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios