ஐபிஎல்லில் எதிரெதிர் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இந்த சீசனில் நான்காவது முறையாக இறுதி போட்டியில் மோதின. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, டி காக்கின் அதிரடியான தொடக்கம், பொல்லார்டின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் 20 ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தது. 

150 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியை பும்ரா மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் இணைந்து கட்டுப்படுத்தினர். இருவரும் சேர்ந்து வீசிய 8 ஓவரில் வெறும் 28 ரன்கள் மட்டுமே வழங்கினர். கடைசி ஓவரை மலிங்கா அபாரமாக வீசியதால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல்லில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் எதிரி அணிகள். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போல ஐபிஎல்லில் மும்பை - சிஎஸ்கே போட்டி ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 4 முறை இறுதி போட்டியில் மோதியுள்ளன. அதில் 3 முறை மும்பை அணியும் ஒரேயொரு முறை சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளன. 

ரோஹித்தின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சிஎஸ்கேவும் மட்டுமே 3 முறை இறுதி போட்டியில் மோதியுள்ளன. அதில் மூன்று முறையுமே மும்பை தான்(நேற்றைய வெற்றியை சேர்த்து) வென்றது. ஐபிஎல்லில் இரு அணிகளுமே வெற்றிகரமான அணிகள் தான். ஒன்றிற்கு ஒன்று சளைத்த அணி அல்ல.

நேற்றைய போட்டியில் கூட ஒரேயொரு ரன் வித்தியாசத்தில் தான் மும்பை வென்றது. ஒரு ரன்னாக இருந்தாலும் வெற்றி வெற்றிதான். எனினும் வெற்றி பெற்ற மும்பை அணியை கொண்டாடும் அதேநேரத்தில் இந்த சீசன் முழுவதும் அபாரமாக ஆடிய சிஎஸ்கேவையும் பாராட்டவோ கொண்டாடவோ தவறக்கூடாது என வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே டுவீட் செய்துள்ளார். 

முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போது வர்ணனையாளராக இருக்கிறார். ஆங்கில ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருக்கும் மஞ்சரேக்கர் பேசுவதை உலகமே கேட்கும். அப்படியிருக்கையில் அவர் நடுநிலையாக பேச வேண்டும். ஆனால் அவரோ எப்போதுமே மும்பை அணிக்கு ஆதரவாக, மும்பை அணியின் ரசிகர் போன்றே பேசிக்கொண்டிருக்கிறார். பிராந்திய மொழிகளில் அந்தந்த அணிகளுக்கு ஓரளவிற்கு சாதகமாக வர்ணனை செய்வர். ஆனால் ஆங்கில தொலைக்காட்சியில் மஞ்சரேக்கர், மும்பை அணிக்கு ஆதரவாக பேசுவார். இதுகுறித்த விமர்சனங்கள் அவர் மீது ஏராளமாக உள்ளன. சிலர் அவரை சமூக வலைதளங்களில் வச்சு செய்கின்றனர். 

அவரை மாதிரியான சிலர் மும்பை அணி தோற்றாலே பெரிதாக பேசுவர். வென்றால் சொல்லவா வேண்டும்..? வெற்றி பெறும் அணியை கொண்டாடுவதை போலவே நன்றாக ஆடிய சிஎஸ்கே அணியை பாராட்ட வேண்டும் என்பதே ஹர்ஷா போக்ளேவின் கருத்து. அவர் மஞ்சரேக்கருக்காக சொல்லவில்லை. பொதுவாகத்தான் சொன்னார். ஆனால் வர்ணனையாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஹர்ஷா போக்ளேவிடமிருந்து மஞ்சரேக்கர் கற்றுக்கொள்ள வேண்டும்.