Harmanpreet Recreates Dhoni’s 2011 WC Moment: இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி கொடுத்த போஸை ரீகிரியேட் செய்துள்ளார்.

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா முன் மகளிர் உலகக் கோப்பையுடன் போஸ் கொடுத்தார். இதன் மூலம் 2011-ல் 'கேப்டன் கூல்' எம்.எஸ். தோனி உலகக் கோப்பையுடன் எடுத்த புகழ்பெற்ற புகைப்படத்தை மீண்டும் அவர் ரீகிரியேட் செய்துள்ளார்.

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி

ஐசிசி தொடர்களில் தனது நீண்ட கால கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பரபரப்பான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தனது முதல் மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது. நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில், வலுவான தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.

தோனி படத்தை ரீகிரியேட் செய்த ஹர்மன்ப்ரீத்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது எக்ஸ் பக்கத்தில், கேட்வே ஆஃப் இந்தியா முன் ஹர்மன்ப்ரீத் இருக்கும் இரண்டு படங்களை வெளியிட்டது. அதில் ஒரு படத்தில், தோனி உலகக் கோப்பையுடன் போஸ் கொடுத்ததை நினைவூட்டும் வகையில், கோப்பையுடன் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

2011 உலகக்கோப்பையை மறக்க முடியுமா?

2011-ல் தோனியின் தலைமையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில், கௌதம் கம்பீரின் 97(122) மற்றும் தோனியின் அதிரடியான 91(79) ரன்களால், 275 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா கோப்பையை வென்றிருந்தது.

ஹர்மன்ப்ரீத் நெகிழ்ச்சி

இந்த பரபரப்பான மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு கோஸ்சுவாமி, அஞ்சும் சோப்ரா பற்றி ஹர்மன்ப்ரீத் நெகிழ்ச்சியுடன் பேசினார். "ஜூலன் தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். நான் அணிக்கு வந்தபோது, அவர்தான் கேப்டனாக இருந்தார். நான் கிரிக்கெட் பற்றி அதிகம் அறியாத ஆரம்ப நாட்களில் அவர் எனக்கு எப்போதும் ஆதரவளித்தார். இதேபோல் அஞ்சும் சோப்ரா எனக்கு நிறைய ஆதரவளித்தார். அவர் என்னை எப்படி தனது அணியுடன் அழைத்துச் செல்வார் என்பது எனக்கு எப்போதும் நினைவிருக்கிறது" என்று ஹர்மன்ப்ரீத் கூறினார்.