தனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் ஆர்டர், 3ம் வரிசை தான் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற வேண்டும் என்ற வேட்கையில் இந்திய வீரர்கள் பலர் அருமையாக ஆடிவருகின்றனர்.

நடராஜன், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் ஆகிய பவுலர்கள் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் களத்திற்கு வந்து குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.

பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் குஜராத் டைட்டன்ஸுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார் ஹர்திக் பாண்டியா. 6 போட்டிகளில் 295 ரன்களை குவித்து, இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார் ஹர்திக் பாண்டியா. கேஎல் ராகுல், ஃபாஃப் டுப்ளெசிஸ், பிரித்வி ஷா ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பாண்டியாவிற்கு பின்னால் தான் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சரி, இந்திய அணியிலும் சரி, பின்வரிசையில் இறங்கி ஃபினிஷர் ரோலையே வகித்துவந்த ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3-4ம் பேட்டிங் ஆர்டரில் இறங்கி புதிய ரோலை வகிக்கிறார். அதிலும் சிறப்பாக செயல்பட்டு பெரிய இன்னிங்ஸ் ஆடி நல்ல ஸ்கோர் செய்துவருகிறார். இந்த சீசனில் 6 இன்னிங்ஸ்களில் 3 அரைசதம் அடித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா அபாரமாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடம் உறுதியாகிவிட்ட நிலையில், அவரது பேட்டிங் ஆர்டர் குறித்த விவாதங்கள் இப்போதே எழ தொடங்கிவிட்டன. ஹர்திக் பாண்டியா 3-4ம் வரிசைகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபாரமாக ஆடிவரும் நிலையில், அவரையே டி20 உலக கோப்பையில் இந்திய அணி 4ம் வரிசையில் இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியிருந்தார்.

இந்நிலையில், பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, 3ம் வரிசை தான் எனது கனவு பேட்டிங் ஆர்டர். 2016 ஐபிஎல்லில் மும்பை அணியில் என்னை 3ம் வரிசையில் இறக்கிவிட்டார்கள். ஆனால் அப்போது அது எனக்கு சரியாக அமையவில்லை. இந்த முறை விடமாட்டேன் என்றார் பாண்டியா.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஆர்டர் குறித்த விவாதம் நடந்துவரும் அதேவேளையில், விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக சொதப்பிவருகிறார். இந்நிலையில், 3ம் வரிசை தான் தனது கனவு பேட்டிங் ஆர்டர் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருப்பது கவனம் ஈர்க்கிறது. ஆனால் அதற்காக கோலியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படவெல்லாம் வாய்ப்பேயில்லை.