இந்திய அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு, 2018ல் நடந்த ஆசிய கோப்பையில் முதுகில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவந்து அதன்பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், ஐபிஎல், உலக கோப்பை ஆகியவற்றில் ஆடிய ஹர்திக் பாண்டியா, உலக கோப்பைக்கு பின்னர் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மீண்டும் முதுகில் காயமடைந்தார். 

இதையடுத்து அதற்காக சிகிச்சையும் ஓய்வும் பெற்றுவந்த ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முழு உடற்தகுதியை பெறாததையடுத்து அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், அவர் ஐபிஎல்லில் ஆடுவாரா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், டிஓய் பாட்டில் டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் காட்டடி அடித்து தனது உடற்தகுதியையும் ஃபார்மையும் நிரூபித்துள்ளார். 

டிஒய் பாட்டில் டி20 தொடரில் சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இறங்கியது முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, அடுத்த 12 பந்தில் அடுத்த 50 ரன்களை அடித்தார். வெறும் 37 பந்தில் சதம் விளாசி மிரட்டினார் ஹர்திக் பாண்டியா. 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் ரிலையன்ஸ் ஒன் அணி 20 ஓவரில் 252 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியாவின் காட்டடி வீடியோ இதோ.. 

வெறித்தனமாக பேட்டிங் ஆடி, அதிரடி சதமடித்து தனது உடற்தகுதி மற்றும் ஃபார்ம் ஆகிய இரண்டையும் ஹர்திக் பாண்டியா நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்க பரிசீலிக்கப்படலாம். எனவே ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் கண்டிப்பாக ஆடுவார் என்பது உறுதியாகியுள்ளது. அதனால் அந்த அணியும் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.