ஐபிஎல் 13வது சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடி, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் கட்டர்கள் மூலம் டெத் ஓவர்களில் அருமையாக வீசி, முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் அனைவரின் பாராட்டுகளையும் குவித்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டார்.

டி20 அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயத்தால் நீக்கப்பட்டதால், அந்த வாய்ப்பை பெற்றார் நடராஜன். 3வது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான நடராஜன், கேப்டன் விராட் கோலியை கவரவே, 3 டி20 போட்டிகளிலும் நடராஜனை ஆடவைத்தார் கோலி.

கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், 2வது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் 3வது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். நடராஜன் வீழ்த்திய அனைத்து விக்கெட்டுகளுமே ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வீழ்த்தப்பட்ட முக்கியமான விக்கெட்டுகள். 

2வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா, அந்த விருதுக்கு தன்னைவிட நடராஜனே பொருத்தமானவர் என்று கூறினார். அதேபோலவே டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றபோது, அந்த விருதை நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார் ஹர்திக் பாண்டியா. கேப்டன் விராட் கோலியும் டி20 கோப்பையை நடராஜனிடம் கொடுத்தார்.

நடராஜனின் திறமையால் வெகுவாக கவரப்பட்ட ஹர்திக் பாண்டியா, நடராஜனை கொண்டாடுகிறார். நடராஜனிடம் தனது தொடர் நாயகன் விருதை கொடுத்தது மட்டுமல்லாது, அந்த புகைப்படைத்தை டுவிட்டரில் பகிர்ந்து, இந்திய அணிக்காக அறிமுகமான தொடரிலேயே அபாரமாக நீங்கள் வீசிய பவுலிங்கே உங்களது திறமையை பறைசாற்றுவதுடன், உங்களது கடின உழைப்பையும் வெளிப்படுத்துகிறது. என்னை பொறுத்தவரை தொடர் நாயகன் விருதுக்கு நீங்களே தகுதியானவர் என்று பதிவிட்டுள்ளார்.