2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான திறமையாலும், சிறப்பான பங்களிப்பாலும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று விதமான அணிகளிலும் நிரந்தர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

முகுதுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா பெரிதாக ஆடவேவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பெங்களூருவில் நடந்த போட்டியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை.

இதற்கிடையே, செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிவித்த ஹர்திக் பாண்டியா, நிச்சயதார்த்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். 

ஹர்திக் பாண்டியா - நடாஷா திருமணம் லாக்டவுனில் எளிமையாக நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், மற்றொரு நற்செய்தியையும் வெளியிட்டுள்ளார். தனது மனைவி நடாஷா கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார். தான் தந்தையாக போகும் மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவித்து மகிழ்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. 

எங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். புதிதாக ஒருவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்க உள்ளோம். உங்களது ஆசீர்வாதங்கள் தேவை என்று ஹர்திக் பாண்டியா பதிவிட்டிருந்தார். 

 

தந்தையாகப்போகும் ஹர்திக் பாண்டியாவிற்கு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.